அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த தான மையத்தில் தன்னார்வ இரத்த தானம் அளித்த அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.
குருதி கொடையாளர்களிடமிருந்து தானமாக பெறப்படும் ரத்தமானது பேறுகால சிகிச்சைகள், விபத்தினால் ஏற்படும் ரத்த இழப்பினை ஈடுசெய்யவும் பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகள், டெங்கு மருத்துவ சிகிச்சைக்கு இரத்த தட்டணுக்கள் வழங்கி உயிர் காக்க பயன்படுத்தப்படுகிறது. உயிர் காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வ இரத்த தான அமைப்பாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், தேவையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரமான பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தம் சார்ந்த சிகிச்சைகள்
கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை (24.10.2024) முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த தான மையத்தில் தன்னார்வமாக இரத்ததானம் அளித்த அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கினார்.
மேலும், தன்னார்வ இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த தான மையத்தில் 3846 குருதி பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குருதி கூறுகள் பிரிக்கப்பட்டு 6000 நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று இரத்ததான முகாம் அமைப்பாளர்களை ஊக்குவிப்பதும், மேலும் அதிக இரத்ததான முகாம் அமைத்து அரியலூர் மாவட்டத்தில் குருதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அ.முத்துக்கிருஷ்ணன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.தி.மணிவண்ணன், இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் மரு.மாரிமுத்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ரமேஷ், நிலைய மருத்துவ அலுவலர் மரு.கொளஞ்சிநாதன், குருதி பரிமாற்றுத்துறையின் இணை பேராசிரியர் மரு.சகுந்தலா, குருதி மைய மருத்துவ அலுவலர் மரு.சந்திரசேகரன், மாவட்ட திட்ட மேலாளர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சுமதி, தன்னார்வ இரத்ததான அமைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.