கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அக். 23-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அஃப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்புடைய முகமது தாரிக், உமர் ஃபரூர் மற்றும் ஃபெரோஸ் கான் ஆகிய மேலும் 3 பேரை கோவையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விசாரணைக்குப் பின்பே குண்டு வெடிப்பு சதித்திட்டத்தில் இவர்களது பங்கு என்ன என்பது குறித்தும், இன்னும் எத்தனை பேர் இந்த சதித்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.