ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து தமிழக சட்டமன்றத்துக்கு வந்திருந்தனர். காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருப்பு ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். அதாவது பாரதிய ஜனதா கட்சியின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தமிழக சட்டமன்றத்தில் உள்ள 4 பாஜக எம்.எல்.ஏக்களில் ஒருவரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் இன்று கருப்பு ஜாக்கெட், கருப்பு சேலை அணிந்தபடி சட்டமன்றத்துக்கு வந்தார்.
அப்போது சட்டமன்ற நுழைவு வாயில் அருகே நின்றிருந்த சில பெண் பத்திரிகையாளர் வானதி கருப்பு உடையில் வருவதை பார்த்து இன்று காங்கிரஸ் தானே கருப்பு உடையில் வருவதாக அறிவித்தார்கள். நீங்கள் ஏன் கருப்புஉடை என்றனர். அப்போது தான் வானதிக்கு காங்கிரசின் கருப்பு சட்டை போராட்டம் தெரியவந்தது.
ஐயய்யோ எனக்கு இது தெரியாதே என கூறி தலையில் அடித்துக்கொண்டு சிரித்தவாறே நடந்தார். இதனால் அந்த பகுதியில் நின்றிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, வானதியின் கையை பிடித்து தன் பக்கமாக இழுத்தார். இதை பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.