கருப்பாக இருப்பதால் தான் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக கூறி கேரள மாநில தலைமை செயலாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. ஸ்புக் பக்கத்தில் சாரதா முரளீதரன் வெளியிட்டுள்ள பதிவில்; தனது கணவர் எந்த அளவுக்கு வெள்ளையாக இருக்கிறாரோ அதே அளவுக்கு தான் கருப்பாக இருப்பதாக தன்னை ஒருவர் விமர்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஒருமுறை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக குறிப்பிட்ட அவர், அதற்கு வந்த கமென்ட்களைப் பார்த்ததும் அதிர்ச்சியால் பதிவை நீக்கி விட்டதாக தெரிவித்தார்.
சில விஷயங்களை நான் விவாதிக்க வேண்டியது அவசியம் என தன் நலன்விரும்பிகள் கூறியதன் அடிப்படையில் மீண்டும் இப்போது இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக சாரதா தெரிவித்துள்ளார். கருப்பாக இருப்பதால் சிறுவயது முதல், தன்னை பெரிய ஆளாக தான் எண்ணியதில்லை என குறிப்பிட்டுள்ள சாரதா, கருப்பு என்பதும் அழகுதான் என்பதை தனது குழந்தைகள்தான் தனக்கு புரிய வைத்ததாகவும் தெரிவித்தார். கருப்பு நிறத்தை வைத்து இழிவுப்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், கருப்பு என்பது மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம் என்று தெரிவித்துள்ளார். தலைமை செயலராக இருந்த தனது கணவர் வேணு ஓய்வு பெற்றதை தொடர்ந்து அப்பதவியில் சாரதா முரளீதரன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.