கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன.
கிட்டத்தட்ட பாஜக வெற்றியை பதிவு செய்துவிட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், வெற்றியை உறுதி செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை முன்னிட்டு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் எக்ஸ் வலைதள பக்கத்தின் மூலம் மக்களுக்கு வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது “ஜன சக்தி உயர்ந்தது! வளர்ச்சி வென்றது, நல்லாட்சி தழைத்தது. டெல்லி மக்களின் இந்த வரலாற்று வெற்றிக்கான தீர்ப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். இந்த வெற்றியால் நாம் பெருமைப்படுகிறோம், மக்களின் நம்பிக்கையைப் பேணுவோம். டெல்லியின் வளர்ச்சிக்காக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ‘விக்சித் பாரத்’ உருவாக்க டெல்லி முக்கிய பங்கு வகிக்க, எந்த முயற்சியையும் தவறவிடமாட்டோம்.
பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் கடின உழைப்பின் மூலம் இந்த அபார வெற்றியை பெற்றுள்ளனர். இனி மேலும் தீவிரமாக உழைத்து, டெல்லி மக்களுக்கு சிறந்த சேவை செய்வோம்” எனவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவருடைய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.