தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக் நேற்று திரூவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. திடீர் உடல்நலக்குறைவால் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிஹார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதேபோல் இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது... அண்ணாவை கருணாநிதி முதன்முதலில் சந்தித்தது திருவாரூரில் தான். இன்றும் கருணாநிதி வாழ்ந்து கொண்டும், ஆட்சி செய்து கொண்டும் இருக்கிறார். என் தந்தைக்கு என்னுடைய தாய் எழுப்பிய அன்பு கோட்டையாகவே கலைஞர் கோட்டத்தை பார்க்கிறேன். எத்தனை இழப்புகளை சந்தித்தாலும், சிரிப்போடு இருந்தவர் என் தாய் தயாளு அம்மாள். 2018ல் இந்த இடத்தை நானும், என் சகோதரியும் வாங்கினோம். 4 ஆண்டுகளில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டம் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். தனக்கு பிடித்த ஊர் திருக்குவளை என்று தான் கருணாநிதி எப்போதும் சொல்வார். கலைஞர் கோட்டம் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். கருணாநிதி எத்தனை தொகுதியில் போட்டியிட்டாலும் , இறுதியாக வந்து நின்றது திருவாரூர் தான். இந்த ஆட்சியை கருணாநிதிக்கு அர்ப்பணிக்கிறேன். கருணாநிதி இருந்தால் என்ன முடிவெடுப்பார் என்பதை யோசித்து செயல்பட்டு வருகிறேன். ஜனநாயகத்திற்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதை காத்தவர். பிரதமர்களை உருவாக்குவதில் கருணாநிதிக்கு பெரும் பங்கு இருந்தது. இந்திய அரசியலில் மாபெரும் ஆளுமையாக இருந்தவர் கருணாநிதி. வரும் 23ம் தேதி பீகாரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜனநாயக போர்க்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கேற்க உள்ளேன். மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழ்நாடு, தமிழ் இந்தியாவிற்கு கேடு என்று இவ்வாறு தெரிவித்தார்.