பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பாஜகவினர் இந்து மத சித்தாந்தம் மற்றும் கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் அதுமட்டுமின்றி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களை சீண்டும் வகையிலும் சிலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் தமிழக பாஜக வை சேர்ந்தவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர். அதிலும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பாஜகவினர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருவதுடன், மதச் சாயம் பூசி மக்களிடையே வெறுப்பை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குறிப்பாக தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு செய்திகளை பதிவிடும் பாஜகவினர் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான சவுதாமணி என்பவர் சமூக வலைத்தளத்தில் பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியிட்டு திராவிட மாடல் ஆட்சியில் மதுப்புழக்கம் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக அவதூறு கருத்து பரப்பிய புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே வதந்திகளை பரப்பிய வழக்கு சென்னையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.