கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பஸ் நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், உடையார்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், அவரவர் கலைந்து செல்லுமாறு பாஜகவினரிடம் தெரிவித்தனர். இதில் அதிருப்தி அடைந்த பாஜகவினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்.
இதில் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை அங்குள்ள தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இச்சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.