ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் போட்டியிடுகிறது. இரு தரப்பினரும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். இன்று எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. அதே நேரத்தில் நேற்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை என கூறி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் டில்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் உள்ள எடப்பாடியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அவருடன் மேலிட பார்வையாளர் ரவி, கரு.நாகராஜன் ஆகியோரும் சென்றனர். எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் இருந்தார்.
ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் தொடர்பாக அவர்கள் சந்திப்பு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு அணிகளும் போட்டியிடும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை எனவே இதற்கு மாற்று வழி குறித்து இவர்கள் ஆலோசித்து இருக்கலாம் , டில்லி மேலிடம் அண்ணாமலையிடம் கூறிய முக்கிய அரசியல் நகர்வு குறித்து அண்ணாமலை, எடப்பாடியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஈரோட்டில் இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தார். அண்ணாமலையை சந்தித்த சில நிமிடங்களில் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்படுவதாகவும்,கடைசிநாளான 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டில்லி உத்தரவிட்டதன் பேரிலேயே அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அநேகமாக அதிமுக சார்பில் 2 பேர் போட்டியிடுவதை தவிர்க்கவும், ஒரே வேட்பாளராக களம் இறக்குவது என்றும் அதில் எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டு இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று டில்லி மேலிடம் கூறியதன் பேரிலேயே அதிமுக வேட்புமனு தாக்ல் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.