கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நேற்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தின் அறையின் கதவை உட்புறமாக பூட்ட முயற்சித்த நிலையில் அலுவலகத்தில் இருந்த அலுவலகப் பணியாளர் அந்த மர்மநபரை வெளியேற்றினார். மேலும் அந்த மர்ம நபர் மீது சந்தேகம் உள்ளது என பந்தய சாலை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே அதே
மர்ம நபர் பாஜக அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அவிநாசி சாலையில் வாகனம் மோதி உயிரிழந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மர்ம நபர் அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கோவை மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சியில் அந்த மர்ம நபர் சாலையைக் கடந்து வந்து எதிர்ப்புறமாக வந்த அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார், ஆனால் பேருந்து ஓட்டுநர் இவர் வந்ததை கண்டு பேருந்தை திருப்பிட பேருந்தின் பின்புற சக்கரத்தில் அடிப்பட்டு காயமடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சித்து தூக்கிய போது நடக்க முடியாமல் நிலைத்தடுமாறி கீழே விழும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
அச்சமயம் அவர் உயிரிழந்திருக்க கூடும் என தெரிகிறது.
தற்போது வரை உயிரிழந்தவர் யார் என தெரிய வராத நிலையில் போலீசார் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.