திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் இன்று பாஜகவை நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாற்றத்தை நோக்கி என்கிற கருப்பொருளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் இன்று தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அந்த நடை பயணத்தை தொடக்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது, எங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளார்கள். இங்கு தொடங்கிய பிரச்சாரம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த பிரச்சார இயக்கத்திற்கு திமுக முழு ஆதரவு
அளிக்கும். என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு மாற்றத்தை நோக்கி என்கிற தலைப்பில் அச்சிடப்பட்ட பிரசுரத்தை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட அதனை முத்தரசன் பெற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன்:-
ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறையை செய்து வருகிறார். ஒன்றிய அரசு ஆளுநர் ரவிக்கு ஆதரவாக இருப்பதால் திமிராக பேசி வருகிறார். இது ஜன நாயகத்திற்கு நல்லதல்ல. தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்து அவரை கைது செய்ய வேண்டும்.
கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மத ரீதியான பிரச்சனையாக திசை திருப்ப முயற்சிக்க கூடாது. அந்த படம் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி மக்களிடம் மோதலை உருவாக்கும் வகையில் உள்ளது.