வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து, வங்க தேச இந்து மக்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அரியலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேச நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளையும் அநீதிகளையும் கண்டித்து, பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அடங்கிய வங்க தேச
இந்து மக்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அரியலூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள், வங்கதேச அரசுக்கு எதிராகவும், இந்துக்களுக்கு ஆதரவாகவும், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பாஜக மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 33 பேரை காவல்துறையினரின் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.