பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அக்.6-ம் தேதி நடைபெற இருந்த நடைபயணம் அக்.16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்று நடக்க இருக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை திட்டமிட்டபடி பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் அண்ணாமலை அக்.3-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அக்.4-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தனது 3-ம் கட்ட நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையில் நடைபயணத்தை அக்.6-ம் தேதி மாற்றியமைத்துவிட்டு, அண்ணாமலை உடனடியாக டில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ், நிர்மலா சீதாராமன் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். இதையடுத்து, நேற்று முன்தினம், இரவு டில்லியில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை சென்னை திரும்பினார்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து இருமல், உடல் வலி, தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இதில் அண்ணாமலையும் பங்கேற்பார் என நேற்று தகவல் வெளியானது. ஆனால் இன்று காலை 10.50மணிக்கு பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் அமைந்தகரையில் தொடங்கியது. இதில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. கேசவவிநாயகம், எச். ராஜா ஆகியோர் தலைமையில் கூட்டம் தொடங்கியது. 1 மணி நேரம் கழித்து அண்ணாமலை கூட்டத்திற்கு வந்து பங்கேற்றார்.