சென்னையில், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டில்லிக்கு அழைக்கப்பட்டார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு குறித்து அவரிடம் நட்டா, அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் விசாரித்தனர். இன்றும் அண்ணாமலை டில்லியிலேயே தங்கி உள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற இருந்தது. இவர் இன்று சென்னை வந்து விடுவார் என கருதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அண்ணாமலை சென்னை வரமுடியாத நிலை ஏற்பட்டதால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல் பரவியது.
ஆனால் இன்று காலை திட்டமிட்டபடி பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கூட்டம் தொடங்கியது. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், வி. பி. துரைசாமி, ஏ.பி. முருகானந்தம், கராத்தே தியாகராஜன், பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை இல்லாமல் கூட்டம் நடத்தினால் தான் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை ஒளிவு மறைவு இன்றி தெரிவிப்பார்கள் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.