Skip to content
Home » 3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அப்போது மோடி பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார். அதன்படி இந்த கூட்டத்திற்கு பிறகு பிரதமரை அண்ணாமலை சந்தித்து பேசுகிறார். இதில் தமிழக அரசியல், நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு பா.ஜனதா கூட்டணி மற்றும் பா.ஜனதா போட்டியிட இருக்கும் தொகுதிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வருகிற 28-ந் தேதி குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளுக்கு, மதுரையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அன்றைய தினமே நெல்லையில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்று பேசுகிறார். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 4-ந் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகை தர உள்ளார். சென்னையில் பா.ஜனதா சார்பில் நடைபெறும் பிரமாண்ட  பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அல்லது பல்லாவரத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நடத்த நடத்த திட்டமிட்டு உள்ளனர். இருப்பினும், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை ஆய்வு செய்த பிறகே பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் இறுதி செய்யப்படும். இந்த பொதுக்கூட்ட மேடையில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக பாஜ முதல் வேட்பாளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியாகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த நெல்லை உள்ளிட்ட 3 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறும் என பாஜக வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *