பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நாளை மறுநாள் செல்வதாக இருந்த திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிக்கு முன்கூட்டியே இன்று பெயரளவுக்கு சென்றுவிட்டு மதியம் விமானத்தை பிடித்து, திடீரென சென்னை சென்று, டில்லிக்கு செல்வதாக கூறப்படுகிறது. மேலும், மதுரை பொதுக் கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இரு தினங்களுக்கு முன்னர் மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் பேசும்போது, ”பாஜக தலைவர் அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. பிரதமர், அமித்ஷாவிடம் மட்டுமே பேசுவோம்,” என்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலையும், ”அரசியல் விஞ்ஞானி (செல்லூர் ராஜூ) சொல்வதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை,’ என, கூறினார். இதைத் தொடர்ந்து அண்ணாமலை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிமுகவினர் காரசார கருத்துக்களை பதிவிடுகின்றனர். பதிலுக்கு பாஜகவினரும் எதிர் வினையாற்றுகின்றனர். இச்சூழலில் அண்ணாமலை டில்லிக்கு அழைக்கப்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பாதயாத்திரையின் முதல் பொதுக்கூட்டம் திடீர் என ரத்து செய்யப்பட்டிருப்பது பாஜகவினர் கட்சியினர் இடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..