தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் கூறி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் விலகினார். அவரைத்தொடர்ந்து ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் விலகினார். இந்நிலையில், பாஜகவின் பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக பதவி வகித்த எம்.ஆர். கிருஷ்ணபிரபு அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகின்றனர், இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், பொருளாதார பிரிவின் பிரச்சனைகளை நேரடியாக சொல்லியும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாலும் பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார்.