பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் சிந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் தற்போது வரை தங்களது நிலைப்பாட்டை சொல்லவில்லை.
தேர்தல் வரும்போது எங்களின் நிலைப்பாட்டை சொல்கிறோம் என்று தான் கூறுகிறார்கள். தேர்தல் நெருங்கும்போது யாருடன் கூட்டணி, எந்த தொகுதி யாருக்கு என சொல்வதாக அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதனை முதலில் சொன்னது தேமுதிக தான். அதனால், தேர்தல் நெருங்கும் போது உரிய நேரத்தில் யாருடன் கூட்டணி, எந்த தொகுதி, எத்தனை சீட் என்பது குறித்து பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக நாங்கள் தெரிவிப்போம் என கூறினார்.
இதன்பின் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு, கூட்டணிக்கு சென்றதும் அதிமுகவும் – பாஜகவும் தான், கூட்டணியில் இருந்து விலகியதும் அதிமுக – பாஜக தான். இதில் தேமுதிகவுக்கு எந்த ரோலும் கிடையாது. அதனால், அவர்கள் ஏன் கூட்டணிக்கு சென்றார்கள், ஏன் கூட்டணியை விட்டு வெளியே வந்தார்கள் போன்ற கேள்விகளை அதிமுக – பாஜகவிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என பதில் அளித்தார். ஏன்னென்றால், அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதால் தான் கூட்டணி முறிவு என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள், அதுபோன்று இல்லை என மற்றொரு தரப்பினர் சொல்கின்றனர். இதனால் அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
மேலும், நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டவர்களை சந்தித்ததாகவும், அப்போது அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து எதையும் பேசவில்லை என்றும், அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் எது சரி, எது தவறு என்பதை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவானால், அதில் தேமுதிக இடம்பெறுமா? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், இப்போது அதுதொடர்பாக சொல்ல முடியாது, கொஞ்சம் பொறுமையாக இருங்க, தேர்தலுக்கு மூன்று மாதம் இருக்கும்போது கூட்டணி குறித்து முடிவு எடுத்துவிடுவோம். அப்போது உறுதியாக தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்போம். தேர்தல் கூட்டணி தொடர்பாக டிசம்பர் அல்லது ஜனவரியில் தெரிவிப்போம் என குறிப்பிட்டார்.
மேலும், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை, தமிழகத்தின் நிரந்தர பிரச்சனைகள் இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் பிரச்சனை, காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை, எய்ம்ஸ் மருத்துவமனை என பல்வேறு பிரச்சனைகள் அப்படியே தான் உள்ளது. இதனால் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யவில்லை என குற்றசாட்டினார்.
இதனால், மத்திய பாஜக அரசுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அனைத்து அரசியல் கட்சியினரும் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு யாரு நல்லது செய்கிறார்களோ, அந்த கட்சியுடன் தான் கூட்டணி என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் முடிவெடுத்தால், கண்டிப்பாக தமிழகத்துக்கு நல்லது நடக்கும். இதுக்கு பிறகாவது தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கணும், எந்த ஆட்சி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்கிறதோ அவர்களுடன் தான் எங்கள் கூட்டணி இருக்கும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.