நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பாஜக கூட்டணியில் தமாகா இணைந்து உள்ளது. இதுபற்றி இன்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து சென்னையி்ல் உள்ள இல்லத்தில் ஜி.கே. வாசனை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் தமாகாவின் மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான யுவராஜ் இன்று சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். தமாகாவில் ஜி.கே. வாசனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் யுவராஜ் .அவர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது வாசன் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை எதிர்த்து, யுவராஜ் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. அதாவது வாசனின் முடிவால் தமாகா இரண்டு பட்டுவிட்டதாக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். யுவராஜ் அதிமுகவில் சேரலாம், அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தமாகா உடைந்து விட்டதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.