கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது, சமூக வலைதள செயல்பாடுகளை பாராட்டி, சமீபத்தில் அண்ணாமலை விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கினார் நடிகர் விஜய்.
இவ்விழாவில் பேசிய விஜய் “அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என முக்கிய அறிவுரையை கூறியுள்ளார். இதற்கு, பெரியார் பற்றி படிக்க சொன்ன கருத்துக்கு தனது சமூக வலைதள பக்கத்தில், விஜய் மற்றும் அவரது மகளையும் அவதூறாக பேசி கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை தொடர்ந்து, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர், அந்த புகாரின் அடிப்படையிலும், திமுக குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பியதன் பேரிலும், அந்த பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி கைது செய்யப்பட்டுள்ளார்.