பிரதமர் மோடி இன்று காலை திருச்சி வந்து, விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். பிரதமரை வரவேற்க தமிழ் நாடு முழுவதும் இருந்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திருச்சியில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், திருச்சியில் பாஜக மாநில செயற்குழு கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி பால்பண்ணை பகுதியில் உள்ள புஷ்பம் மகாலில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2. 30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி. ராமலிங்கம், பொதுச்செயலாளர்கள் கே.பி. ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி, கார்த்திகேயினி உள்பட 150 நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிலைப்பாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக கூட்டணியில் இணைய சம்மதித்துள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது, பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.