தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நேற்று கேள்வி நேரத்தில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது..
பா.ஜ., – நயினார் நாகேந்திரன்: மக்களை பாதிக்கும் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ரத்து செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை சுரங்கப்பாதை அமைத்து இணைத்தால், நெல்லை மாவட்ட மக்கள் பயன் பெறுவர்.
சபாநாயகர் அப்பாவு: இத்திட்டம் ஏற்கனவே அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்கு வனத்துறையின் அனுமதி வேண்டும்.
நயினார் நாகேந்திரன்: வனத்துறையின் அனுமதியை நான் வாங்கித் தருகிறேன். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, தமிழகத்தின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற முயற்சி மேற்கொண்டார். சென்னையில் பெரும் நெருக்கடி உள்ளது. திருச்சியில் காவிரியாறு ஓடுகிறது. அதனால், தண்ணீர் பிரச்னை இல்லை.
தமிழகத்தில் மட்டும் ஒன்பது, ‘வந்தே பாரத்’ ரயில்கள் விட்டுள்ளோம். தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் திருச்சிக்கு, 3 மணி நேரத்தில் வந்து விடலாம். தலைநகரை மாற்ற, சென்னை எம்.எல்.ஏ., பரந்தாமன் என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை.
சபாநாயகர் அப்பாவு: நாட்டின் தலைநகர் டில்லி என்பதை, சென்னைக்கு மாற்ற சொல்கிறார்.
நயினார் நாகேந்திரன்: வாய்ப்பு வரும் போது மாற்றலாம். அதற்கான வாய்ப்பும் வரும். சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் ஏழு நாள் கூட்டத்தை, சோதனை முயற்சியாக திருச்சியில் நடத்தலாம். அதிகார பரிமாற்றம் எப்படி இருக்கிறது என்பதை மக்களும் அறிவர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.