கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே 10ம் தேதி நடக்கிறது. பிரசாரம் அனல் பறக்கிறது. . மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடித்தால் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிடலாம் என பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தரப்பும் தீவிரமாக பிரசாரமும் மேற்கொண்டு வருகிறது. தென் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் இந்த மாநிலத்தை விட்டு விட பாஜக தயாராக இல்லை இதற்காக பிரதமர் மோடி பலமுறை கர்நாடக மாநிலத்திற்கு சென்று பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். அமித்ஷாவும் தீவிரமாக பிரசாரம் செய்துள்ளார்.
இரு தரப்பு பிரசாரத்திற்கு இடையே கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளும் ஆதரவாக வந்து கொண்டுள்ளது. இருந்த போதும் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று பாஜக போராடி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகாரை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற அண்ணாமலை பணத்தை கட்டு கட்டாக கொண்டு சென்றதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்து இருந்தது. மேலும் தனது பழைய போலீஸ் நண்பர்களை வைத்து பணம் பட்டுவாடா செய்யும் வேலையிலும் அண்ணாமலை ஈடுபடுவதாக குற்றச்சாட்டு கூறியிருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்கு விமானத்தில் செல்வதற்காக பெலகாவி விமான நிலையம் வந்த பாஜகவை சேர்ந்த கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தாராமையா ஆகியோர் விமான நிலையத்தில் திடீரென சந்தித்து கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.அப்போது தேர்தல் வெற்றிக்காக இருவரும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்தனர். தேர்தல் களத்தில் தான் விரோதி உள்ளே நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் அளவில், காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தாரமையா, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தோளில் தட்டி சிரித்து பேசினார். அனல் பறக்கும் பிரசாரத்தின் மத்தியிலும், இந்த அன்பான உரையாடல் காங்கிரஸ், பாஜக கட்சி தொண்டர்கள் சூட்டை மட்டுமல்ல, கோடை வெயிலின் சூட்டையும் தணிப்பதாக இருந்தது என தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். .