பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கெட்ட சகுனம் என்று பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுலின் கருத்துக்கள் மோசமான ஒன்று, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்று பாஜக கூறியுள்ளது.
பிரதமர் மோடி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பார்த்ததாலேயே இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது என்ற அர்த்தத்தில் பிரதமர் மோடி கெட்ட சகுனம் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.
“இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது” என்று பாஜக கூறியது. ஒரு விளையாட்டில் வெற்றி என்பது யார் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து வருவது அல்ல, தனிப்பட்ட அணிகளின் பலத்தைப் பொறுத்தது அது என்று பாஜக கூறியுள்ளது.
கோடீஸ்வரர்களின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ராகுல் கூறிய கருத்துகளை பாஜக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடி எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், அதற்குப் பதிலாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணையின்படி செயல்படாத சொத்துக்களுக்கு (NPA) வங்கிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அது கூறியது. பாஜக பிரதிநிதிகள் நேற்று தலைமைத் தேர்தல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்தனர்.