மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் முதற்கட்டமாக 195 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜனதா நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் முன்னாள் மத்திய சுகாதார மந்திரியும், டெல்லி சாந்தினி சவுக் தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான ஹர்ஷவர்தன் பெயர் இடம் பெறவில்லை. மாறாக சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்பவரை வேட்பாளராக பா.ஜனதா அறிவித்துள்ளது. இந்த நிலையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ஹர்ஷவர்தன் நேற்று அறிவித்தார். டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் டாக்டர் பணியில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹர்ஷவர்தன் மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.