பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.
பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை, வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது. எங்களை துரும்பைக்கொண்டு அடித்தால், நாங்கள் தூணைக்கொண்டு அடிப்போம் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்ததும், பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் மோதல் இல்லை. அவர்கள் சொன்ன கருத்துக்கு பதில் சொன்னோம். அவ்வுளவு தான் என்றார். ஆனால் பாஜக நிர்வாகி மீண்டும் அதிமுக மீது தாக்குதல் தொடுத்துள்ளார்.
தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: . “இத்தனை நாட்கள் தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.க.வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது”, என அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன், செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்தபோது வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மோகோல் மிதக்கவிட்ட படத்தையும் அமர் பிரசாத் ரெட்டி பகிர்ந்துள்ளார்.