திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி உறையூர் சாலை ரோடு தனியார் மண்டபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும் மூத்த தோழர் நல்லக்கண்ணு வின் நூற்றாண்டு விழாவும் வரும் டிசம்பர் 26 ந் தேதி
தொடங்குகிறது. அதனை சிறப்பாக கொண்டாட உள்ளோம்.
மத்திய அரசு பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகிறது.
திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு தனியார்மயாக்குதல் கொள்கையை கைவிட வேண்டும்.
மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
மத்திய அரசு இதை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு.
பூண்டு, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே மாநில அரசு இதை கவனத்தில் கொண்டு கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.
மாநகராட்சி நகராட்சிகளில் சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்
மத்திய அரசு சொத்து வரி தொடர்பாக மாநில அரசை நிர்பந்தம் செய்வது தெரிகிறது. இருந்த போதும் அதை தடுக்க மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுப்பட வேண்டும் என்பதை நூற்றாண்டு விழாவில் வலியுறுத்துவோம். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் காலத்தின் கட்டாயம். அதற்கான முயற்சி ஏற்கனவே நடந்து வருகிறது, தொடர்ந்து நடக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொடர்பாக பா.ஜ.க விற்கும் துண்டு போட்டு வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி கருத்தை தமிழிசை வரவேற்திருப்பதன் மூலம் அவர்கள் ஒத்த கருத்தில் இருப்பது தெரிகிறது. ஒத்த கருத்து உள்ள அந்த இருக்கட்சிகளும் கூட்டணி சேர வேண்டியது தான்.
ஆளுங்கட்சி மீது தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அதிருப்தி இருக்க வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள்.
எங்களது பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். பாசிசம் பாஜக தமிழகத்தில் காலூன்ற கூடாது என்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் என்னவோ அதை ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம், தொடர்ந்து அதை தீவிரப்படுத்துவோம்.
எல்லா காலங்களில் அரசியல் விவாதம் நடந்து கொண்டு தான் உள்ளது. விஜய் வந்த பிறகும் நடக்கிறது. இது புதிதல்ல
உலகில் சிறந்த கொள்கை சோசலிசம் தான். அதை விடுத்து விஜய் பேசுகிறார் என்றால் அவருக்கு அறிவுரை கூறுங்கள் சோசலிசத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிய வையுங்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்,மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.