திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 20-ம் தேதி தடை விதித்தார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த தடையை அவர் விதித்திருந்தார். இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.
அப்போது அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி தீர்ப்பில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பாஜக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே. பாஜகவின் பத்திரிகை விளம்பரங்கள் திரிணாமுல் காங்கிரஸ் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில் உள்ளது.
பாஜக தன்னைப்பற்றி பெருமை பேசலாமே தவிர, எதிர்க்கட்சிகளை கீழ்த்தரமாக விமர்சிக்கக் கூடாது. திரிணாமுல் காங்.குக்கு எதிராக அவதூறாக விளம்பரங்கள் பாஜக வெளியிட ஐகோர்ட் விதித்த தடையில் தலையிட விரும்பவில்லை. பிரச்சனையை மேலும் சிக்கலாக்கக் கூடாது எனக்கூறி பாஜகவின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.