காங்கிரஸ் கட்சியின் பதவி காலத்தில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பா.ஜ.க. இன்று வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி தனது பதவி காலத்தில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல் செய்து உள்ளது என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில், காங்கிரஸ் பைல்சின் முதல் எபிசோடு. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த ஊழல்களை பாருங்கள் என அந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் என்றால் ஊழல் என பொருள், என்று தொடங்க கூடிய அந்த வீடியோவில், காங்கிரஸ் கட்சியின் 70 ஆண்டு கால ஆட்சியில், ரூ.4 கோடியே 82 லட்சத்து 69 ஆயிரம் கோடி பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. அந்த பணம் ஆனது பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பல பயனுள்ள பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பா.ஜ.க தெரிவித்து உள்ளது. இந்த தொகையை கொண்டு 24 ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல்கள், 300 ரபேல் போர் விமானங்கள் மற்றும் ஓராயிரம் மங்கள் திட்ட பணிகளை உருவாக்கியோ அல்லது கொள்முதல் செய்தோ இருக்கலாம். ஆனால், இந்த நாடு காங்கிரசின் ஊழலை விலையாக தாங்க வேண்டி இருந்தது. வளர்ச்சிக்கான பந்தயத்திலும் பின்தங்கி காணப்பட்டது என்று வீடியோவில் தெரிவித்து உள்ளது. இது வெறும் டிரைலர் என்றும், படம் இன்னும் முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.