பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என கூறப்படுகிறது. கனகபுராவை சேர்ந்த அவர்கள் பெங்களூருவில் தனித்தனியே தங்கி வேலை செய்து வருகின்றனர். நவ்யா, தனது செல்போனில் வேறு ஒரு நபருடன் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நவ்யா மீது பிரசாந்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கேட்டு அவர் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் நவ்யாவின் பிறந்த நாள் ஆகும். ஆனால் அன்றைய தினம் அவர் வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார்.
இதனால் பிறந்த நாளை கொண்டாட முடியாவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், நவ்யாவின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. நவ்யாவும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அந்த சமயத்தில் பிரசாந்த், த்தியை எடுத்து நவ்யாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நவ்யா, சம்பவ இடத்திலேயே பலியானார்.
மறுநாள் நீண்ட நேரமாக அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ராஜகோபால்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது நவ்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவரது சடலம் அருகே பிரசாந்த் இருந்தார். இதையடுத்து பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், நவ்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதும், அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றதும் தெரிந்தது. மேலும் காதலி பிணத்துடன் சுமார் 4 மணி நேரம் அவர் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து நவ்யாவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது காதலியின் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.