Skip to content
Home » சிகப்பாக பிறந்த 2 குழந்தைகள்… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்..

சிகப்பாக பிறந்த 2 குழந்தைகள்… மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(32) டிரைவர். இவர் அதே தெருவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், அகிலாவுக்கு முதல் குழந்தை பிறந்தபோது குழந்தை சிகப்பாக பிறந்ததால் அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு அடுத்த குழந்தையும் சிகப்பாக பிறந்ததால் ஐயப்பனின் சந்தேகம் அதிகரித்தது. இதனால், ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு அகிலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், சிகரெட் நெருப்பால் மனைவியின் உடலில் சுட்டு சித்திரவதை செய்துள்ளார்.

இதனால், கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற அகிலாவை அவரது பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி காலை அகிலாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். அகிலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்த அவரது உறவினர்கள் வீட்டில் மயங்கிக்கிடந்த அகிலாவை மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அகிலாவின் தந்தை சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அரசு தரப்பில் 18 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் வாதாடிய வந்த நிலையில், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கந்தகுமார் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பின்படி மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குத்தாலம் போலீஸார் ஐயப்பனை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். மயிலாடுதுறையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உருவாக்கப்பட்டப் பிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!