பிறப்பு சான்றிதழ் வாங்க இனி மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம். குழந்தை பிறந்த 15 நாளில் உரியவர்களின் வீடுகளுக்கே பிறப்பு சான்றிதழ் வந்து விடும். அஞ்சல் துறை மூலம் மாநகராட்சியே உரியவர்களுக்கு இந்த சான்றிதழை அனுப்பிவிடும்.
தமிழ்நாட்டில் , தஞ்சை மாநகராட்சி இந்த திட்டத்தை இன்று அமல் படுத்தியது. முதல்கட்டமாக இன்று 30 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் பதிவுத்தபாலில் அனுப்பப்பட்டது. இதற்காக தபால் கட்டணம் கூட மாநகராட்சி பெறாது. தனது சொந்த நிதியில் இருந்து மாநகராட்சி இதனை அமல்படுத்துகிறது. இதுபோல இறப்பு சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் 15 நாளில் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
இதற்கான நிகழ்ச்சி இன்று தஞ்சை மாநகராட்சியில் நடந்தது. மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையாளர் கண்ணன் மற்றும் தபால்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஆணையர் கண்ணன் கூறும்போது வரும் 1ம் தேதி முதல் மாநகராட்சியன் சொத்து வரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் தபால் மூலம் அனுப்பும் சேவை நடைமுறைப்படுத்தப்படும். சொத்து வரி வசூலில் 92 % இலக்கை அடைந்து தஞ்சை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது என்றார்.