தஞ்சை மாவட்டம், வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் சுதன், பர்வீன் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக உயிரியல் ஆசிரியர் முத்தமிழ்செல்வி வழிகாட்டுதலின்படி நெல் வயல்களில் பறவைகளின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதற்காக வெட்டிக்காடு, அய்யனார்புரம்,
கிருஷ்ணாபுரம் வெட்டிக்காடு எஸ் எம் பாலம், சில்லத்தூர், கருப்பட்டி காடு ஆகிய பகுதிகளில் நெல் வயல்களுக்கு வருகை தரும் பறவைகளின் இனம், நடவடிக்கைகள், எண்ணிக்கை ஆகியவற்றை கவனித்து பதிவு செய்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவான பறவைகள், எதிரான பறவைகள் எவை எவை என்பது குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இது தொடர்பான கட்டுரையை அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பறவைகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களும் வழங்கினர்.