அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூர் ஏரி, சுக்கிரன் ஏரி, இலந்தைகுளம் ஏரி உட்பட்ட 10 ஈர நிலங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பில் மாவட்ட வன அலுவலர் தா. இளங்கோவன் தலைமையில் அரியலூர் வன பணியாளர்கள், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஈர நில நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பும் மார்ச் மாதத்தில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும் வனத்துறையின் மூலம் நடத்தப்படுகிறது. இம்முறை மாணவர்கள், வனப் பணியாளர்கள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு உருவாக்கிய 10 குழுக்கள் மூலம்
கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பின் முடிவில் சுமார் அறுவதற்கும் மேற்பட்ட இனங்களைச் சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சைபீரியா, மங்கோலியா, ரஷ்யா, தெற்காசிய நாடுகளில் இருந்தும் வட இந்தியாவில் இருந்தும் பறவைகள் அரியலூர் மாவட்டத்திற்கு வலசை வந்திருப்பதாக தெரிய வருகிறது. முக்கியமாக கரைவெட்டி, வெங்கனூர், சுக்கிரன் ஆகிய ஏரிகளில் பறவைகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தா. இளங்கோவன் தெரிவித்தார். நிறைவாக கணக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட வன அலுவலர் தா. இளங்கோவன் சான்றிதழ்களை வழங்கினார்.