திருச்சியின் ஒரே சுற்றுலாத்தலம் முக்கொம்பு. சுற்றுலாத்துறை நடத்திவரும் இந்த பூங்கா சிதிலமடைந்து கிடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை என்ன செய்கிறது என்பது அந்த அதிகாரியைத்தவிர யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு சுற்றுலாத்துறை திருச்சியில் செயல்படாத துறையாக இருக்கிறது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து முக்கொம்பு செல்லும் வழியில், அதாவது காவிரி கரையில் குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை அருகே மாநகராட்சி் சார்பில் பிரமாண்டமான பறவைகள் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 13.7 கோடி ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த பறவைகள் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பறவைகள் பூங்காவானது 6 ஏக்கர் பரப்பளவில், அமையஉள்ளது.
செயற்கை அருவிகள் மற்றும் குளங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படுகின்றன. மேலும் அரிய வகை பறவைகளும் இங்கு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்ற 5 திணைகளாக நிலங்களை தமிழ் இலக்கியம் பிரித்து பார்க்கிறது. இந்த 5 திணைகளையும் மக்களுக்கு விளக்கும் வண்ணம் இங்கு 5 திணை நிலங்களும் அமைகிறது. மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி, மற்றும் பாலைவனம் போன்றவை தத்ரூபமாக இந்த பூங்காவில் அமைக்கப்பட இருக்கின்றன.
மினி தியேட்டர் ஒன்றும் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த தியேட்டரில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் சார்ந்த மற்றும் பறவைகள் சார்ந்த படங்கள் திரையிடப்படும் . குழந்தைகள் பயன்பெறும் வகையில் அறிவியல் குறும்படங்களும் திரையிடப்படும் .
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இந்த பூங்காவில் கேண்டீன், பார்க்கிங் வசதிகள் அதாவது 60 கார்களும், 100 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது.
பறவைகள் பூங்கா அமைக்கப்படும் பணியை திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கஅதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.