Skip to content

பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பாத்திரம்- தண்ணீர் அமைப்பு வழங்கியது

கோடை காலத்தில் பறவை இனங்களுக்கு தண்ணீர்,  உணவு வழங்குங்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அவரும் பறவைகளுக்கு இரை வைப்பது போன்ற வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

பறவைகள் சாப்பிட்டு இடும் எச்சங்களின் வாயிலாக பல நூறு மரங்களின் விதைகள், தாவரங்கள் , கொடிகள் வளர்ந்து அடர்ந்தக் காடுகள் உருவாகிறது. இந்த உணவுச் சங்கிலி அறுபடாமல் தடுக்க பறவையினங்களை நாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் பறவை இனங்கள் சிறுக சிறுக அழிந்துவிடும்.

ஆறு, குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளில் கோடையில் தண்ணீர் வற்றி வருவதுடன், அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளாகக் கட்டி பறவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விடுகிறோம். இதை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக மண் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வீட்டு மொட்டை மாடி, ஜன்னல் பகுதி, வாசல் பகுதி, தோட்டம், நீர்நிலைகள் மற்றும் மரங்கள் அருகில்  ைவக்கும்படி வீடுகள்தோறும் தண்ணீர் ஊற்றிவைக்கும்  பாத்திரங்கள்  வழங்கப்பட்டது.

கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு மண்பானையில் தண்ணீர் வைத்தால், அது நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும். பறவைகள் முழ்கி குளித்து உடல் சூட்டை தணித்துக் கொள்ளவும் உதவும்.

இன்று பொன்மலையடிவாரப் பகுதியில் தொடர்ந்து மரங்கள் அடர்ந்த பகுதியில்  தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள்  வழங்கப்பட்டது.  மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தலைமையில்  இந்த நிகழ்ச்சி நடந்தது.

தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா, மெக்கானிக் மணி, என்.வெங்கடேஷ், தேவி கிருஷ்ணமூர்த்தி, மலைக்கோட்டை தாமு, சுமன், சுதன்,மற்றும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!