அரபிக்கடலில் இந்த ஆண்டின் முதல் புயலாக ‘பிபர்ஜாய்’ உருவானது. தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையாக உருவான இந்த புயல், கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் புயலாக வலுவடைந்தது. பின்னர் இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. இதுநேற்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த இந்த புயல் நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது. முன்னதாக நேற்று நண்பகலில் இருந்தே குஜராத்தின் கரையோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. புயல் கரையை நெருங்க நெருங்க அடர்த்தியான கருமேகங்கள் சூழ்ந்து மழை தீவிரமடைந்தது.
குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கட்ச் மற்றும் தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் பேய்மழை கொட்டியது. பிபர்ஜாய் புயலின் கண் சுமார் 50 கி.மீ. விட்டம் கொண்டது. இது மணிக்கு 13 முதல் 14 கி.மீ. வேகத்தில் முன்னேறியது. இதனால் புயலின் கண் பகுதி கரையை கடக்க நள்ளிரவு வரை ஆனது. புயலின் கண் பகுதி கரையை நெருங்க நெருங்க மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அசுர வேகத்தில் வீசிய காற்றுக்கு முன் மரங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே அவை அடுத்தடுத்து வேருடன் சாய்ந்தன.
கட்ச், தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் ஏராளமான மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களும் சரிந்தன. இதைப்போல வீடுகளின் தகர ஷீட் கூரைகள் காற்றில் பறந்தன. குடிசை வீடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன் மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் மரம் சரிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க குஜராத்தின் கடற்பகுதியில் பலத்த மழையும், கொடுங்காற்றும் வீசியது. கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் கடல் நீர் கரையோர கிராமங்களுக்குள் புகுந்தது. கடல் கொந்தளிப்பால் கரைப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. மாநிலத்தில் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசார், தீயணைப்பு படையினர் என மிகப்பெரிய அளவில் மீட்புப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைப்போல முப்படைகள் மற்றும் கடலோர காவல்படை என பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் முழுவீச்சில் களமிறக்கப்பட்டன. அவர்கள் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவை கடந்தும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
முன்னதாக புயல் கடந்து செல்லும் பாதையில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்று மாலை வரை 94 ஆயிரத்துக்கு அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அதி தீவிர புயலான பிபர்ஜாய் குஜராத்தில் ஏற்படுத்திய சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. இது விரைவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த புயல் காரணமாக இதுவரை 22 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 940 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன என்றும் குஜராத் மாநில நிவாரண ஆணையர் அலோக் சிங் தெரிவித்தார். மேலும் 23 விலங்குகளும் பலியாகியுள்ளன. கனமழை மற்றும் பலத்த காற்றுடன் குஜராத்தில் பல்வேறு இடங்களில் 524 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன என்றும் அவர் தெரிவித்தார்.