கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாண்டார் வீதியில் வசிப்பவர் ஜான்சிராணி. அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக
பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து அவருடன் பிறந்த மூத்த சகோதரர் பொன்னம்பலம், இவர் மும்பையில் வசித்து வருகிறார். சுங்கவரி இலாக்காவில் சூப்பரிண்டாக பணியாற்றி வருகிறார். இவரும், இவர்களுடைய தம்பி செந்தில்குமார் ஆகியோர் சகோதரி குடும்பத்துக்கு ஆறுதலாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை ஜான்சிராணி அளித்துள்ளார்.
அந்த மனுவில், கணவனை இழந்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றேன். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கார்வாடி கிராமத்தை சார்ந்த சைன் என்ற சாமியாரை வைத்து கொண்டு தனது சகோதரர்கள் எனக்கும், என் மகன்களுக்கும் கண்டம் இருப்பதாகவும், உறவினர்கள், பில்லி சூன்யம் வைத்திருப்பதாகவும், கண்டிப்பாக உன் குடும்பம் அழிந்து விடும் என்று சாமியார் மூலம் பயமுறுத்தினர். மன பயத்தினால் சகோதர்களின் ஒத்துழைப்போடு, போலி சாமியாரை வைத்து கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் வரை ஒவ்வொரு முறையும், பூஜைக்கு பரிகாரம் செய்ய என 2 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை கொடுத்து வந்துள்ளேன். என்னிடம் இருந்து இதுவரை 1,82,24,493 ரூபாய் பெற்று என்னை கடனாளியாக்கி கஷ்டசூழ்நிலைக்கு ஆளாகிவிட்டேன். இது சம்மந்தமாக போலி சாமியாரை அனுகி கேட்டதற்கு, கொடுத்த பணத்திற்கு, பரிகாரம் முடிந்துவிட்டது. அதனால்தான் உன் குழந்தைகளுடன் உயிருடன் இருக்கிறீர்கள் என்று கூறுகிறார். மேலும் இது சம்பந்தமாக என்னிடம் வரக்கூடாது என்றும், நீ என்னிடம் கொடுத்த பணத்தை கேட்டால் – உன்னை குடும்பத்தோடு அழித்து விடுவேன் என்றும், மாந்தீரிக சக்தியால் உன்னை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். நீ எங்கே போனாலும் கவலைபடமாட்டேன் என்றும், அதற்குள் உன்னை அழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
போலி போலிசாமியாருக்கு கேரளாவிலும் வீடு உள்ளது.
மேலும், இது தொடர்பாக என் அண்ணன் பொன்னம்பலத்திடம் சொன்னேன். அவரும் ஆமாம் நானும் தான் மேற்கண்ட சாமியாரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டேன் என்றும் இது சம்பந்தமாக இனிமேல் என்னிடம் கேட்கவோ பேசவோ கூடாது மீறி பேசினால் எனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்றும், மேலும், நான் சுங்கவரி இலாகாவில் “சூப்பரிண்டாக” உள்ளேன். என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார். எனவே அவர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுத்து என்னிடம் பெற்ற பணத்தை மீட்டுத்தருவதுடன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி ஆசிரியை ஒருவரிடமே 1 கோடிக்கணக்கான ரூபாயை போலி சாமியார் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.