கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசியல் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு அமைப்பினர் மோட்டார் பைக் மற்றும் வாகனங்களில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். போலீசார் எவ்வளவோ கட்டுப்பாடுகளை வைத்திருந்தாலும் அதையும் மீறி மோட்டார் பைக்கில் சென்ற ஒரு சில இளைஞர்கள் சாலையில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திய சம்பவம் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் நடுவே உள்ள தடுப்பு கட்டையின் மேலே இளைஞர் ஒருவர் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறி வருகின்றனர். தற்போது அந்த இளைஞர் தடுப்பு கட்டையின் மேலே மோட்டார் பைக்கில் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.