தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே விக்ரமம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதிகா (30). இவர்களின் மகன் மோனிஷ் (9). இன்று காலை ராதிகா தனது மகன் மோனிஷை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் பரவாக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, மதுக்கூரில் இருந்து மன்னார்குடி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சை முந்திக் கொண்டு ராதிகா செல்ல முயன்றார்.
அப்போது திருவாரூர் மாவட்டம் பைங்காநாடு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகன் விக்னேஷ் (18) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், ராதிகா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ராதிகா, மோனிஷ், விக்னேஷ் ஆகியோர் மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உட்பட 3 பேரின் உடலையும் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த விக்னேஷ் கும்பகோணம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி.,முதலாம் ஆண்டு படித்து வந்தார் .