பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகே பிஹ்தா என்ற நகரம் உள்ளது. இந்த பகுதிகளில் சட்ட விரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்த சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் துணிச்சலாகள சென்றார். அவருடன் இரு ஆய்வாளர்களும் சென்று இருந்தனர். ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது.
மணல் குவாரியில் பல லாரிகள் வரிசையாக மணலுடன் நின்று கொண்டிருந்தன. பெண் அதிகாரி வந்ததை பார்த்த சட்ட விரோத கும்பல், அந்த பெண் அதிகாரியை சரமாரியாக தாக்கினர் . தரதரவென இழுத்துசென்றும் தாக்குதல் நடத்தினர். கற்கள் விசீயும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய வழக்கில் 44- பேரை போலீசார் கைது செய்தனர். அவகளுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் கடத்தலில் ஈடுபட்ட ஏனைய நபர்களையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாட்னா காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், “மணல் குவாரியை ஆய்வு செய்ய சென்ற மாவட்ட சுரங்க அதிகரியை சமூக விரோத கும்பல் தாக்கியுள்ளது. இது தொடர்பாக 44 பேரை கைது செய்து இருக்கிறோம். மாவட்ட சுரங்க அதிகாரி மற்றும் அவருடன் சென்ற இரண்டு ஆய்வாளர்கள் என 3 பேர் காயம் அடைந்துள்ளனர்” என்றார். மேலும், பலரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.