பீகாரில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசினார். அப்போது பெண்கள் குறித்து நிதிஷ் குமார் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நிதிஷ் குமார் பேசியதாவது: மக்கள் தொகையை கட்டுப்படுத்த பெண்களுக்கு கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம் , கணவரின் செயல்பாடுகள் தான் அதிக குழந்தை பிறப்புக்கு காரணமாகிறது. எனினும், கல்வி அறிவின் மூலம் கணவரை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பெண்களுக்கு தெரியும்.தற்போது பிறப்பு விகிதம் சரிந்து வருவதற்கு இதுவே காரணம் என நகைச்சுவை பாணியில் பேசினார்.
கருவுறுதல் விகிதம் இதற்கு முன்பு 4.3 சதவிகித ம் இருந்தது ,ஆனால் தற்போது 2.9 ஆக குறைந்துள்ளது. விரைவில் 2 ஆக குறையும்” என்றார்.
நிதிஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டதும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிரித்தனர். ஆனால், அவையில் இருந்த சில பெண் எம்.எல்.ஏக்கள் நிதிஷ்குமாரின் கருத்தால் கொஞ்சம் நெளிந்தனர்.
நிதிஷ்குமாரின் இந்த பேச்சை பிடித்துக் கொண்ட பாஜக, முதல்வரின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது என்று சாடியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநில பாஜகவின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய அரசியலில் நிதிஷ்குமாரை விட இழிவான அரசியல்வாதி யாரும் இருக்க மாட்டார்கள்” என மிகக்கடுமையாக விமர்சித்துள்ளது.
பாஜக எம்.எல்.ஏ காயத்ரி தேவி கூறுகையில், நிதிஷ்குமாருக்கு 70-வயது ஆகிறது. அவர் முட்டாள்தனமான கருத்துகளை கூறி வருகிறார். பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வார்த்தைகளை நிதிஷ்குமார் பயன்படுத்தியிருக்கிறார். அவரின் கருத்துக்கு எதிராக நாங்கள் போராடுவோம்” என்றார்.
இந்த நிலையில் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், தனது பேச்சில் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை. பெண்களின் கல்வி குறித்து பேசினேன். இது பெண்களை வருத்தம் அடைய செய்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என அவர் கூறினார்.