ஒரு தனியார் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வந்தது. இதனை கமலஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள்ளே நடக்கும் நிகழ்ச்சி தான் இது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இறுதிப்போட்டியில் நடிகை மாயா, (விக்ரமில் நடித்தவர்) அர்ச்சனா, நடன கலைஞர் மணிசந்திரா, சீரியல் நடிகர் விஷ்ணு விஜய், தினேஷ் ஆகியோர் இடம் பிடித்தனர்.
கடைசி 2 வாரங்கள் இருக்கும்போதே இந்த முறை பிக்பாஸ் டைட்டில் நடிகை மாயாவுக்கு தான் கிடைக்கும் என்ற தகவல் பரவியது. அவரும், தினேசும், அர்ச்சனாவும் , விஷ்ணுவும் அந்த விருது பெறுவதற்கான தகுதி உடையவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் மாயாவுக்கு தான் விருது கிடைக்கும் என பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களே பேசத் தொடங்கிய நேரத்தில் தான் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகை மாயாவை வைத்து விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி திரித்து பேசிய வீடியோ வெளியானது.
துபாயில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் கமல் மற்றும் மாயா இருவரையும் இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் இவர்கள் ட்ரோல் செய்திருந்தனர்.
அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மளமளவென பரவி செம வைரல் ஆனது. அதில் குரேஷி கமல் போல் மிமிக்கிரி செய்ய, புகழ் அவரிடம் கேள்வி கேட்பார்.
உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன என்று கேட்டால் மாயாஜால் என கூறுகிறார். பிடித்த படம் மாயாபஜார், தமிழ்நாட்டில் பிடித்த இடம் மாயவரம் என கூற. கமலுடன் மாயாவை மோசமாக ட்ரோல் செய்யும் வகையில் புகழ் குரேஷி பேசியுள்ளனர் .
இதனை கண்ட கமல் மற்றும் மாயாவின் ரசிகர்கள் புகழையும் குரேஷியையும் கண்டபடி திட்டி கமெண்டில் வறுத்தெடுத்தனர். மாயாவுக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைக்கும் என பேசிக்கொண்டிருந்த நிலையில், இந்த வீடியோ வெளியானதால் கமல் ரசிகர்கள் மட்டுமல்ல, கமலும் வருத்தத்திற்கு உள்ளானாராம்.
இந்த நிலையில் தான் நேற்று நடந்த பிக்பாஸ் இறுதிப்போட்டியில் அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதுடன், மாயா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மாயாவை வெற்றியாளராக தேர்வு செய்தால், புகழும், குரேஷியும் சொல்லியது உண்மை என ஆகிவிடும். அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே வெற்றியாளர் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.
அதே நேரத்தில் மாயாவின் வெற்றியை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புகழும், குரேஷியும் வேண்டும்என்றே இந்த வீடியோவை வெளியிட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்தும் அவர்களிடம் விசாாிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் இப்போது வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். இந்த முறை பிக்பாஸ் விளம்பரப்படுத்தப்படும்போது, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் பேசினார். அந்த வாசகம் பிக்பாஸ் பைனலுக்கும் மிக பொருத்தமாக அமைந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.