தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் மாலையில் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், திங்கள்கிழமை (ஜூன் 19) மஞ்சள் அலங்காரமும், 20 ஆம் தேதி குங்கும அலங்காரமும், 21 ஆம் தேதி சந்தன அலங்காரமும், 22 ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 23 ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 24 ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 25 ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 26 ஆம் தேதி கனி வகை அலங்காரமும், 27 ஆம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன.
நிறைவு நாளான 28 ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு காவடி, செண்டை மேளம், நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளன.