சாம்பார், கூட்டு, பொரியல், ஆம்லெட், சட்னி என சமையலில் முக்கிய இடம் பிடிப்பது பெரிய வெங்காயம். இது தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுவதில்லை. கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் அங்கு பயிர்கள் சேதமடைந்து மகசூல் குறைந்து விட்டது. மகாராஷ்டிராவில் தேர்தல் நடப்பதால் வெங்காய அறுவடை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் அளவு வெகுவாக குறைந்து உள்ளது. அது மட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதிக்கு தடை நீக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது போன்ற காரணங்களால் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை காய்கறிகடைகளில் ஒரு கிலோ 120 முதல் 130 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது உச்சம் தொட்டுள்ள வெங்காயத்தின் விலையானது இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரிக்கு பின்னா வெங்காயத்தின் விலை குறைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வேளாண் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பண்ணைபசுமை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.