திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆய்வு படிப்பு மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் காலையில் பல்கலைக்கழக பஸ்களில் வந்து விடுகிறார்கள். மாலையில் இவர்கள் பல்கலைக்கழக வாகனங்களிலேயே மத்திய பஸ் நிலையம் வரை சென்று விடுகிறார்கள். இவர்கள் தவிர பல மாணவர்கள் பஸ்களிலேயே வந்து செல்கிறார்கள்.
பிஎச்டி உள்ளிட்ட ஆய்வு படிப்பு மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் வழக்கமான நேரத்தை விட அதிகமான நேரம் பல்கலையில் செலவிடவேண்டியது இருக்கிறது. எனவே இவர்கள் இரவு 7 மணி, 8 மணி அளவில் தான் திரும்ப நேரிடுகிறது. இதற்காக பல்கலைக்கழக மெயின் கேட்டில் உள்ள பஸ் நிறுத்ததில் வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
அந்த நேரத்தில் புதுக்கோட்டையில் இருந்து வரும் வாகனங்கள் இங்கு பெரும்பாலும் நிற்பதில்லை. காரணம் ஒருசிலர் மட்டுமே பஸ்சை எதிர்பார்த்து நிற்பதால் வெளியூர் பஸ்கள் வேகமாக சென்று விடுகிறது. டவுன் பஸ்கள் வரும்வரை காத்திருக்க வேண்டி உள்ளது. அதே நேரம் இந்த பகுதி இரவு 7 மணி அளவில் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியாக இருப்பதால், போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறிவிடுகிறது.
அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவிகள் திக் திக் மனநிலையில் தான் நிற்கிறார்கள். காரணம்- போதை ஆசாமிகள் பலர் அங்கு மாலை வேளைகளில் உலா வந்து விடுகிறார்கள். எனவே பல்கலைக்கழக பஸ் நிறுத்தம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு வசதி செய்வதுடன் , அங்கு ஒரு பயணி நின்றாலும் பஸ்கள் நின்று அவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். குறிப்பாக ஆய்வு படிப்பு மேற்கொண்டுள்ள மாணவிகள் இந்த கோரிக்கை வைக்கிறார்கள்.