Skip to content

கூலி வேலைக்கு சென்று முனைவர் பட்டம் பெற்ற பாரதி

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ் 2 வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார். பின்னர் ஏழ்மை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் அவரது தாய் மாமாவான சிவப்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கும் நிலம் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

ஆனாலும் பாரதிக்கு எப்படியாவது மேற்படிப்பு படித்து கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தார். அவரும் பாரதியை மேற்படிப்பு படிக்க வைக்க ஊக்கப்படுத்தினார். தன்னுடைய மனைவி வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார். இதனால் அனந்தபூரில் உள்ள கல்லூரியில் பாரதியை சேர்த்து படிக்க வைத்தார். கணவரின் நிதி சுமையை குறைக்க வேண்டும் என்று எண்ணிய பாரதியும் விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைக்குச் சென்றார். பின்னர் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார். கல்லூரி பேராசிரியர்களும் பாரதியை நன்றாக படிக்க ஊக்கப்படுத்தினர்.

இதனால் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதி அதே பாடப்பிரிவில் பி.எச்.டி. (டாக்டர்) பட்டம் பெற்றார். இதன்மூலம் தன்னுடைய கணவருக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடி தந்துள்ளார். விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *