தமிழகத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:
பெஞ்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும், தொடர்ந்து. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்தது. டிசம்பர் 1-ம் தேதி புயல் கரையை கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியதால் சாலைகள், மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது. எனவே, பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்துக்கு அவசர நிதி உதவி தேவைப்படுகிறது. பாதிப்பு களின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசர தேவையை கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும்.
மேலும், விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும். மத்திய குழு ஆய்வு அடிப்படையில், தேவைப்படும் கூடுதல் நிதியை வழங்க வேண்டும். தமிழகம் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு. இயல்பு நிலையை விரைவில் எட்ட, தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் பிரதமரின் ஆதரவு. சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.