ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். பதட்டமான சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்க இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டிப்பதாக தெரிவித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், நிலைமை மோசமடைவதைத் தடுக்க இரு நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்படுவதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகளை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இரு நாட்டு உறவும் மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.