கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு தேயிலை தோட்டம் 2-வது டிவிஷனில் மேற்பார்வையாளராக பணிபுரிபவர் புஷ்பராஜன்(54). இவர் நேற்று தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, செடிகளுக்கு இடையே மறைந்திருந்த கரடி ஒன்று, திடீரென புஷ்பராஜனின் காலை கடித்துள்ளது. கரடியை கண்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பராஜன் அலறி துடித்தார். இதனை கண்டு அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் சத்தம் எழுப்பியபடி அங்கு ஓடிவந்தனர். இதனால் அச்சமடைந்த கரடி, அங்கிருந்து தப்பி ஓடியது.
கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்த புஷ்பராஜனை தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக உருளிகல் எஸ்டேட்டில் உள்ள மத்திய மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கரடி தாக்கிய தகவல் அறிந்த வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவல்லி செல்வம், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புஷ்பராஜனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவரது சிகிச்சைக்கு நிதியுதவியும் வழங்கினார். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.